ரமலான் வரலாறு...
ரமலான் (Ramadan)அரபு மொழி: رمضان இசுலாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமாகும். இம்மாதம் ரம்ஜான், ரமலான் எனவும் அழைக்கப்படுகிறது. இம்மாதத்தில் உலகெங்கிலும் உள்ள இசுலாமியர்கள் நோன்பை அனுசரிக்கிறார்கள். இசுலாமிய நம்பிக்கையின்படி முகம்மது நபிக்கு முதன் முதலில் குரானை வெளிப்படுத்திய மாதத்தை நினைவுகூறும் விதமாக இந்த நோன்பை அனுபவிக்கிறார்கள். ஆண்டுக்கொரு முறை அனுசரிக்கப்படும் இந்த நோன்பு இசுலாத்தின் ஐந்து தூண்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த மாதமானது நிலவின் பிறைக்காட்சியின்படியும், ஹதீஸ்களில் தொகுக்கப்பட்டுள்ள பல்வேறு வாழ்க்கை வரலாறுகளின்படியும் 29–30 நாட்கள் இருக்கலாம்.
ரமதான் என்ற அராபிய வார்த்தையானது ரமிதா அல்லது அர்-ரமத் (சுடும் வெப்பம் அல்லது உலர்தன்மை என்ற பொருளைத் தரக்கூடியது) என்பதிலிருந்து வருவிக்கப்பட்டுள்ளது. நோன்பானது வயது வந்த இசுலாமியர்களுக்கு கட்டாயமான கடப்பாடு ஆகும்.
நோய்வாய்ப்பட்டவர்கள், பயணத்தில் உள்ளோர், வயது முதிர்ந்தோர், கர்ப்பிணிப் பெண்கள், பாலுாட்டும் தாய்மார்கள், நீரிழிவு நோயாளிகள், கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மாதவிடாய் காலத்தில் உள்ளோர் ஆகியோர் மட்டுமே நோன்பிருப்பதிலிருந்து விலக்களிக்கப்பட்டவர்கள் ஆவர். மக்காவில் இருந்து மதீனாவிற்கு இசுலாமியர்கள் குடியேறிய இரண்டாம் வருடத்தில், ஷப்பான் மாதத்தில் ரமலான் நோன்பு நோற்க வேண்டும் என்பது கட்டாயமான கடப்பாடாக இருந்தது. நள்ளிரவு சூரியன் அல்லது துருவ இரவு போன்ற இயற்கை நிகழ்வுடன் வாழும் முஸ்லிம்கள் மக்காவின் கால அட்டவணையைப் பின்பற்ற வேண்டும் என்று பத்வாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.,[9] ஆனால், பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்து என்னவென்றால், அந்தந்தப் பகுதிகளில் உள்ள முஸ்லிம்கள் பகலிலிருந்து இரவை வேறுபடுத்த இயலக்கூடிய நாளிலிருந்து தமக்கு நெருங்கிய நாட்டின் கால அட்டவணையை பின்பற்ற வேண்டும் என்பதாகும்.
நோன்பினால் விளையும் நற்பண்புகள்...
நோன்பின் காலத்தில் தன்னடக்கம், வெகுளாமை, நாவடக்கம், உணவுக்கட்டுப்பாடு, சமூக நலம் பேணுதல் போன்ற நல்ல விளைவுகள் ஏற்படுகின்றன. ரமலான் நோன்பின் பலன்கள் குறித்து திருக்குர்ஆனின் இரண்டாம் அத்தியாயம் 183 ஆம் வசனத்தில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது. "இறை நம்பிக்கை கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு கடமை ஆக்கப்பட்டது போல உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்" என்பதே அந்த வசனம் ஆகும்.
ரமலான் மாதச் சிறப்பு...
ரமலான் மாதம் அருள் நிறைந்த மாதம், நன்மைகளை அதிகம் செய்யும் மாதம், பிழைப்பொறுப்புத் தேடும் மாதம், அல்லாஹ்வை அதிகம் நெருங்கும் வாய்ப்பைப் பெறும் மாதம், சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்பட்டு நரகத்தின் வாசல்கள் மூடப்படும் மாதம், சாத்தான்கள் விலங்கிடப்படும் மாதம், ஆயிரம் மாதங்களை விட சிறப்புமிக்க ஓர் இரவைக் கொண்ட மாதம், நரகவாதிகள் நரகத்திலிருந்து விடுதலை பெறும் மாதம், குர்ஆனை இப்பூவுலகத்தில் இறக்குவதற்கு அல்லாஹ் தேர்ந்தெடுத்த மாதம், துஆக்கள் அங்கீகரிக்கப்படும் மாதம் என்று இந்த மாதத்திற்கு பல சிறப்புக்கள் இருப்பதாக இஸ்லாமிய மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். இம்மாதத்திலும் நன்மைகள் செய்யாதவர் எல்லா நன்மைகளையும் இழந்தவர் என்றும் இந்த மாதத்தில் அல்லாவிடம் பாவமன்னிப்புக் கேட்காதவர் அல்லாவின் அருளை விட்டுத் தொலைவில் இருப்பார்கள் என்றும் நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்.
வணக்கங்களைச் செய்பவர்களுக்கு கூலியாக மறுமையில் சுவர்க்கத்தை ஏற்பாடு செய்து வைத்திருக்கின்றான் என்பது இஸ்லாமிய நம்பிக்கையாகும். இந்த வணக்கங்களின் வரிசையில் ஒன்றாக உள்ளதுதான் நோன்பு. நோன்பு என்னும் வணக்கம் மற்ற வணக்கங்களிலிருந்து எதிர்பார்க்கப்படும் தியாகங்களுக்கு முற்றிலும் மாறுபடுகின்றது. நோன்பு என்பது பசி, தாகம், இச்சை, இவைகளை இறைவனிடத்திலுள்ள நன்மையை எதிர்பார்த்தவராக நோன்பு மாதத்தின் பகல் நேரத்தில் கட்டுப்படுத்திக் கொள்வதாகும். இது ஒரு சடங்காகக் கருதாமல் வணக்கம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் செய்வதாகக் கொள்ளப்படுகிறது. நோன்பின் நோக்கமே இறையச்சத்தை ஏற்படுத்திக் கொள்வதுதான்.
இறையச்சம் என்பது அல்லாவிற்கு பயந்து, அவன் அறிவுறுத்தியவைகளை செய்தும், தடை செய்தவைகளை தவிர்த்தும் நடப்பதுதான். இஸ்லாம் நோன்பாளி, யாருக்கும் தெரியாத இடத்தில் தனிமையில் இருக்கும் போதும் பசியுள்ளவராக இருந்தும் தன்னிடத்திலுள்ள உணவை உண்ணக் கூடாது. தாகமுள்ளவராக இருந்தும் எதையும் குடிக்கக் கூடாது. இச்சை இருந்தும் அதை நிறைவேற்றக் கூடாது.
பருவமடைந்த இஸ்லாம் ஆண், பெண் அனைவரும் நோன்பு இருப்பது கடமையாகும். இருப்பினும் சில அவசியங்களின் அடிப்படையில் நோன்பு இருப்பதிலிருந்து கீழ்காணும் நிலையில் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
முதுமை மற்றும் நீங்காத நோயின் காரணத்தினால் நோன்பு நோற்க முடியாதவர்கள் ஒவ்வொரு நோன்பிற்குப் பதிலாக ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும். பைத்தியக்காரர்கள், நன்மை-தீமையை பிரித்தறிய முடியாத மூளை வளர்ச்சி குன்றியவர்கள், வயோதிகத்தால் புத்தி பேதலித்தவர்கள் ஆகியோர் நோன்பு நோற்பது கடமையில்லை. நோன்புக்கு பதிலாக ஏழைகளுக்கு உணவு ஏதும் கொடுக்க வேண்டியதுமில்லை. சில நாட்களில் நீங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படும் நோயாக இருந்தால் அந்த நோயின் காரணமாகவும் நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது. நோய் நீங்கியபின் விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும். பயணம் செய்பவர்களுக்கு நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது. ஊர் திரும்பியபின் விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும்.
1. ஃபஜ்ருக்கு சற்று முன்பு ஸஹர் உணவு உண்பதும் சூரியன் மறைந்த உடனே தாமதப்படுத்தாது நோன்பு திறப்பதும் சுன்னத்தாகும்.
2. பேரித்தம் பழத்தை கொண்டு நோன்பு திறப்பது, அது கிடைக்கவில்லையெனில் தண்ணீரைக்கொண்டு நோன்பு திறப்பது சுன்னத்தாகும்.
3. ஸஹர் நேரத்தில் தாமதமாக எழுந்து ஃபஜ்ருடைய நேரம் வந்துவிட்டது என தெரிந்தும் ஸஹர் என்ற பெயரில் எதையேனும் உண்பது தவறாகும். ஃபஜ்ர் நேரம் வந்துவிட்டால் எதையும் உண்ணக்கூடாது. இது போன்ற நிலைகளில் ஸஹர் செய்யாமலேயே நோன்பு நோற்க வேண்டும்.
4. ஹலால் என்னும் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட உணவையே உட்கொள்ள வேண்டும்.
5. நோன்பாளி அதிகமான வணக்க வழிபாடுகளில் ஈடுபடவேண்டும், அல்லாஹ் தடுத்தவைகளை விட்டும் முழுமையாக தவிர்ந்து கொள்ள வேண்டும். பொய், புறம், கோள் சொல்லுதல், ஏமாற்றுதல், ஹராமான வழியில் பொருளீட்டல் போன்ற தவறான அனைத்து சொல், செயல்களை விட்டும் தவிர்ந்திருத்தல் கட்டாயக் கடமையாகும்.
6. ரமலான் கடைசிப் பத்து நாட்களில் அதிலும் குறிப்பாக ஒற்றைப்படை இரவுகள் அனைத்திலும் இரவு முழுவதும் வணக்க வழிபாட்டில் ஈடுபட்டு லைலத்துல் கத்ர் இரவை தேடிக்கொள்ள வேண்டும்.
7. பெருநாள் தொழுகைக்கு முன்பு ஸதகத்துல் ஃபித்ர் எனும் பெருநாள் தர்மத்தை முறையாகக் கொடுக்க வேண்டும்.