அட்சய திருதியை வரலாறு...
அட்சய திருதியை (அல்லது அக்ஷய தீஜ்) என அறியப்படுவது இந்து மற்றும் சமணர்களின் புனித நாள் ஆகும். அது தமிழ் மாதமான சித்திரையில் வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுவதாகும்.முதல் யுகமான கிருதயுகத்தில் பிரம்மனால் உலகம் தோற்றுவித்த நாள் அட்சய திருதியை ஆகும்.
இந்து மதத்தில் குறிப்பிடப்படும் காக்கும் கடவுளான திருமாலால் ஆளப்படுவதாகும். மேலும் இந்து புராணங்களில் குறிப்பிடப்படும் முனிவரான பரசுராமரின் பிறந்த நாளாகவும் கொண்டாடப்படுகிறது, அவர் திருமாலின் பத்து அவதாரங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறார். இந்து இதிகாசங்களின்படி, அட்சய திருதியை நாளில் திரேதா யுகம் தொடங்கியது, மேலும் பகீரதன் தவம் செய்து இந்தியாவின் மிகப் புனிதமான புண்ணிய நதியான கங்கை நதி சொர்க்கத்திலிருந்து பூமிக்கு வரவழைத்தது இந்நாளில்தான் எனக் கூறப்படுகிறது. சமணர்களை பொறுத்தவரை தீர்த்தங்கரர்களுள் ஒருவராகிய ரிசபதேவரின் நினைவாக இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.
"அட்சயா" எனும் சொல் சமசுகிருதத்தில் எப்போதும் குறையாதது எனும் பொருளில் வழங்கப்படுகிறது. மேலும் இந்த நாள் நல்ல பலன்களையும் வெற்றியையும் தரும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக மங்களகரமான நீண்டகால சொத்துக்களான தங்கம், வெள்ளி, அவற்றினால் செய்யப்பட்ட நகைகள், வைரம் மற்றும் இதர விலைமதிப்பற்ற கற்கள் மற்றும் வீடு-மனைகள் போன்றவற்றை வாங்க உகந்த நாளாகவும் கருதப்படுகிறது. மரபியல் வழிவந்தவர் அட்சய திருதியை நாளில் தொடங்கப்பட்ட எந்தவொரு முயற்சியும் தொடர்ச்சியாக வளர்ந்து நன்மையைக் கொடுக்கும் எனக் கூறுகின்றனர். ஆகையால் ஒரு வணிகத்தினைத் துவங்குவது, கட்டடம் கட்ட பூமி பூசையிடுவது போன்ற புதிய முயற்சிகளை அட்சய திருதியை நாளில் செய்ய பலர் விரும்புகின்றனர்.
சோதிட முக்கியத்துவம்...
இந்து மதத்தின் நல்ல நேரம் (முகூர்த்தம்) பார்க்கும் சோதிடத்தின் படி மூன்று பௌர்ணமி நாட்கள் (திதிகள் ) மிக மங்களகரமானவையாகக் கருதப்படுகின்றன. இவை மூன்றரை திதிகள் என்றும் அழைக்கப்படுகின்றன. அவை: சித்திரை மாத வளர்பிறையின் முதல் திதி புது வருட துவக்கமாகவும், ஆவணி மாதத்தின் வளர்பிறையின் பத்தாம் திதி விஜய தசமியாகவும், வைகாசி மாதத்தின் வளர்பிறையின் மூன்றாம் திதி ’’அட்சய திருதியை யாகவும்’’ ( பரசுராமர் ஜெயந்தி) கொண்டாடப்படுகிறது. கார்த்திகை மாதத்தின் வளர்பிறையின் முதல் திதி அரை திதியாகக் கணக்கில் கொண்டு இவை "மூன்றரை (3 1/2) முழுத்தங்கள்" என்று அழைக்கப்படுகின்றன. முதல் மூன்று திதிகள் முழுமையான திதிகளாகவும் கடைசி திதி அரை திதியாகவும் கணக்கிடப்படுகின்றன. இவை மொத்தம் சேர்ந்து மூன்றரை முழுத்தத்தை வழங்குகின்றன. சோதிட சாத்திரத்தின்படி இந்நாளில் சூரியனும் சந்திரனும் சம அளவு உயரொளியுடன் விளங்கும் என நம்பப்படுகிறது.
அட்சய திருதியை நவன்ன பர்வம் எனவும் அழைக்கப்படுகிறது. அட்சய திருதியை ரோஹிணி நட்சத்திரத்துடன் வரும் நாள் மிக மங்களகரமானதாகக் கருதப்படுகிறது.
இந்து இதிகாசப்படி, அட்சஷய திருதியை நாளன்றே வேதவியாசர் மகாபாரத இதிகாசத்தை விநாயகரிடம் எழுதச் சொல்லி கட்டளையிட்டார்.
திருமாலின் அவதாரமான பரசுராமரின் பிறந்த நாளாகவும் கடைபிடிக்கப்படுகிறது.இன்றும் கோவாவும் கொங்கண் பகுதியும் பரசுராம சேத்திரங்கள் எனக் குறிப்பிடப்படுகின்றன
வைசாக மாதத்தின் வளர்பிறையின் மூன்றாம் நாளான அட்சய திருதியை வருடத்தின் மிகப் புனிதமான நாட்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.
பொதுவாக இந்த நாளில் திருமாலை நெல் அரிசியுடன் வணங்கியும் உண்ணா நோன்பிருந்தும் வழிபடுவர். இந்நாளில் கங்கை நதியில் நீராடுவது மிக மங்களகரமானது எனக் கருதப்படுகிறது.
பாஞ்சாலியின் மானம் காக்க, கண்ணன் ’அட்சய’ என்று கூறி பாஞ்சாலியின் ஆடையை வளரச் செய்ததும் அட்சய திருதியை நாளன்றுதான்
அட்சய திருதியை திருமணங்களுக்கு ஏற்ற காலமாகவும் கருதப்படுவதால் அந்நாளில் பெரும் எண்ணிகையிலான திருமணங்களும் நடத்தப்படுகின்றன.
செல்வத்திற்கு அதிபதியான குபேரரே செல்வமிக்க கடவுள் என நம்பப்படுகிறார். இந்த நாளில் குபேரர் கூட விஷ்ணுவின் மனைவியும் செல்வத்திற்கான தெய்வமான லட்சுமியை வணங்குவார் என லட்சுமி தந்தரம் எனும் நூல் கூறுகிறது. இந்த நாளில், குபேர லட்சுமி பூசை நடத்தப்படுகிறது. அதில் லட்சுமி உருவப்படத்துடன் குபேரரின் அடையாளமான சுதர்சன குபேர எந்திரமும் ஒன்றாக வைக்கப்பட்டு வணங்கப்படுகிறது.
ஆலய வழிபாடு...
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் உள்ள முக்கூடல் தீர்த்தத்தில் நீராடுதல்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவதிருப்பதிகளில் ஒன்றான திருக்கோளூர் பெருமாள் தரிசனம்.
கும்பகோணம் பெரிய தெருவில் பதினாறு பெருமாள்களும் ஒருசேர தரும் தரிசனம் காணுதல்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள வெள்ளூரில் உள்ள மகாலட்சுமி பிரதிஷ்டை செய்த திருக்காமீஸ்வரர் கோயிலில் வழிபாடு செய்தல்,
சேலம் மாவட்டம், எட்டிக்குட்டைமேடில் உள்ள பதினாறு லட்சுமி கொண்ட ஸ்ரீ ஸ்ரீ அதிர்ஷ்டலட்சுமி திருகோவிலில் சிறப்பு பூஜை, சிறப்பு அன்னதானம், திருக்கோயில் வரும் சுமங்கலி பெண்களுக்கு மங்கல பொருள் வழங்கப்படும்.