புனித வெள்ளி

புனித வெள்ளி வரலாறு...

புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி அல்லது ஆண்டவருடைய திருப்பாடுகளின் வெள்ளி (Good Friday) என்பது கிறிஸ்தவர்கள் இயேசு கிறித்து அனுபவித்த துன்பங்களையும் சிலுவைச் சாவையும் நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகின்ற ஒரு விழா ஆகும். கிறித்தவ வழிபாட்டு ஆண்டில் முக்கியமான இந்த நாள் இயேசு உயிர்பெற்றெழுந்த ஞாயிறு கொண்டாட்டத்திற்கு முந்திய வெள்ளிக்கிழமை நிகழும். இயேசு கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூர்கின்ற இவ்விழாவின்போது கிறித்தவக் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

விவிலிய ஆதாரங்கள்...

இயேசு மனித குலம் முழுவதையும் பாவத்திலிருந்தும் சாவிலிருந்தும் மீட்பதற்காகவும், இறைவாழ்வை மனிதருக்கு அளிப்பதற்காகவும் துன்பங்கள் பல அனுபவித்து சிலுவையில் இறந்தார் என்பது கிறித்தவ நம்பிக்கை. இந்நம்பிக்கைக்கு முக்கிய ஆதாரமாக இருப்பவை நற்செய்தி நூல்கள் ஆகும். கீழ்வரும் பகுதிகளைக் காண்க:

1.மத்தேயு நற்செய்தி 26:36-75; 27:1-61

2.மாற்கு நற்செய்தி 14:32-72; 15:1-47

3.லூக்கா நற்செய்தி 22:39-62; 23:1-56

4.யோவான் நற்செய்தி 18:1-40; 19:1-42

சிலுவையில் தொங்கிய இயேசு...
மாற்கு 15:33-34

“ நண்பகல் வந்தபொழுது நாடெங்கும் இருள் உண்டாயிற்று. பிற்பகல் மூன்று மணிவரை அது நீடித்தது. பிற்பகல் மூன்று மணிக்கு இயேசு, "எலோயி, எலோயி, லெமா சபக்தானி?" என்று உரக்கக் கத்தினார். "என் இறைவா, என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்?" என்பது அதற்குப் பொருள். ”

லூக்கா 23:32-34

“ வேறு இரண்டு குற்றவாளிகளையும் மரணதண்டனைக்காக அவர்கள் அவரோடு கொண்டு சென்றார்கள். மண்டை ஓடு எனப்படும் இடத்திற்கு வந்ததும் அங்கே அவரையும் வலப்புறம் ஒருவனும் இடப்புறம் ஒருவனுமாக அக்குற்றவாளிகளையும் அவர்கள் சிலுவைகளில் அறைந்தார்கள். அப்போது (இயேசு, "தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை" என்று சொன்னார்.) அவர்கள் அவருடைய ஆடைகளைக் குலுக்கல் முறையில் பங்கிட்டுக் கொண்டார்கள். ”

லூக்கா 23:39-43

“ சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த குற்றவாளிகளுள் ஒருவன், "நீ மெசியாதானே! உன்னையும் எங்களையும் காப்பாற்று "என்று அவரைப் பழித்துரைத்தான். ஆனால் மற்றவன் அவனைக் கடிந்து கொண்டு, "கடவுளுக்கு நீ அஞ்சுவதில்லையா? நீயும் அதே தீர்ப்புக்குத்தானே உள்ளாகி இருக்கிறாய். நாம் தண்டிக்கப்படுவது முறையே. நம் செயல்களுக்கேற்ற தண்டனையை நாம் பெறுகிறோம். இவர் ஒரு குற்றமும் செய்யவில்லையே!" என்று பதிலுரைத்தான். பின்பு அவன், "இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்" என்றான். அதற்கு இயேசு அவனிடம், "நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்" என்றார். ”

லூக்கா 23:44-48

“ ஏறக்குறைய நண்பகல் பன்னிரண்டு மணி முதல் பிற்பகல் மூன்று மணிவரை நாடெங்கும் இருள் உண்டாயிற்று. கதிரவன் ஒளி கொடுக்கவில்லை. திருக்கோவிலின் திரை நடுவில் கிழிந்தது. "தந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்" என்று இயேசு உரத்த குரலில் கூறி உயிர் துறந்தார். இதைக் கண்ட நூற்றுவர் தலைவர், "இவர் உண்மையாகவே நேர்மையாளர்" என்று கூறிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார். இக்காட்சியைக் காணக் கூடிவந்திருந்த மக்கள் அனைவரும் நிகழ்ந்தவற்றைக் கண்டு, மார்பில் அடித்துக் கொண்டு திரும்பிச் சென்றனர். ”

யோவான் 19:25-27

“ சிலுவை அருகில் இயேசுவின் தாயும், தாயின் சகோதரியும் குளோப்பாவின் மனைவியுமான மரியாவும், மகதலா மரியாவும் நின்று கொண்டிருந்தனர். இயேசு தம் தாயையும் அருகில் நின்ற தம் அன்புச் சீடரையும் கண்டு தம் தாயிடம், "அம்மா, இவரே உம் மகன்" என்றார். பின்னர் தம் சீடரிடம், "இவரே உம் தாய்" என்றார். அந்நேரமுதல் அச்சீடர் அவரைத் தம் வீட்டில் ஏற்று ஆதரவு அளித்து வந்தார். ”

யோவான் 19:28-29

“ இதன்பின், அனைத்தும் நிறைவேறிவிட்டது என்பதை அறிந்த இயேசு, "தாகமாய் இருக்கிறது" என்றார். மறைநூலில் எழுதியுள்ளது நிறைவேறவே இவ்வாறு சொன்னார். அங்கே ஒரு பாத்திரம் நிறையப் புளித்த திராட்சை இரசம் இருந்தது. அதில் கடற்பஞ்சை நன்கு தோய்த்து ஈசோப்புத் தண்டில் பொருத்தி அதை அவர்கள் அவரது வாயில் வைத்தார்கள். ”

யோவான் 19:30

“ அந்தப் புளித்த இரசத்தைக் குடித்ததும் இயேசு, "எல்லாம் நிறைவேறிற்று" என்று கூறித் தலை சாய்த்து ஆவியை ஒப்படைத்தார்.